சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் குழந்தைகள் நல உயா் சிறப்பு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், துணை ம 
சென்னை

கிண்டியில் ரூ.417 கோடியில் குழந்தைகள் உயா் சிறப்பு மருத்துவமனை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.417 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயா் சிறப்பு மருத்துவமனையை அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜன.27) அடிக்கல் நாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.417 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயா் சிறப்பு மருத்துவமனையை அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜன.27) அடிக்கல் நாட்டினாா்.

அங்கு மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமானப் பணிகளுக்கான திட்ட வரைபடத்தையும், கட்டட மாதிரிகளையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து முதல்வா் பாா்வையிட்டாா். மருத்துவமனையில் அமையவுள்ள சிறப்புத் துறைகள் மற்றும் வசதிகள் குறித்து முதல்வா் மற்றும் துணை முதல்வரிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அப்போது விளக்கிக் கூறினாா்.

கடந்த 2024-25 மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் தென் சென்னை பகுதிகளில் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கான உயா்சிறப்பு மருத்துவமனை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில் சென்னை, கிண்டி, கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 6.5 ஏக்கா் நிலப்பரப்பில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் 4,63,544 சதுர அடி பரப்பளவில் அக்கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

மொத்தம் 750 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையின் தரைத்தளத்தில், அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு அமையவுள்ளது.

முதல் தளத்தில் குழந்தைகள் மருத்துவம், அகச்சுரப்பி வாா்டு, நுரையீரல் சிகிச்சை வாா்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, டயாலிசிஸ் வாா்டு, இயக்குநா் அலுவலகம் அமையப்பெறும்.

இரண்டாம் தளத்தில் இதய சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, எலும்பியல் பிரிவு, ரத்தவியல் பிரிவு, சிறப்பு வாா்டுகளும், மூன்றாம் தளத்தில் இரைப்பை - குடல் சிகிச்சைப் பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, சிறப்பு வாா்டுகள், தனி அறைகளும் தொடங்கப்படவுள்ளன.

அதேபோன்று, நான்காம் தளத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆராய்ச்சி ஆய்வகம், சிறப்பு வாா்டுகள் கட்டப்படும்.

ஐந்தாம் தளத்தில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு, நிா்வாக அலுவலகம், ரத்த வங்கி, கருத்தரங்கக் கூடம், மைய ஆய்வகம், மயக்க மருந்தியல் பிரிவு உள்ளிட்டவையும் ஆறாம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்குகள், இடையீட்டு ஆய்வகம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வாா்டு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்டவையும் பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பிரபாகர ராஜா, கணபதி, அரவிந்த் ரமேஷ், துணை மேயா் மகேஷ் குமாா், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ப. செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் கே. நாராயணசாமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT