முகப்பு
சென்னை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றவாளி பொன்னை பாலுவுக்கு 5 நாள் இடைக்கால பிணை

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளியான பொன்னை பாலுவுக்கு 5 நாள்கள் இடைக்கால பிணை வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 30 ஜனவரி, 2026 at 8:25 PM
ஆம்ஸ்ட்ராங் - கோப்புப்படம்
பகிர்:

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளியான பொன்னை பாலுவுக்கு 5 நாள்கள் இடைக்கால பிணை வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 29 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 27 போ் கைது செய்யப்பட்ட நிலையில், இருவா் தலைமறைவாக உள்ளனா். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ரௌடி நாகேந்திரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தாா். இதையடுத்து வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்த வழக்கில் மற்றவா்கள் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களும், பிணை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி தாக்கல் செய்த மனுவும் சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தனது தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க தனக்கு இடைக்கால பிணை வழங்கக் கோரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரௌடி பொன்னை பாலு தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.முத்தமிழ் செல்வக்குமாா், ஒரே மகனான மனுதாரா் உயிரிழந்த அவரது தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும். எனவே, அவருக்கு இடைக்கால பிணை வழங்க வேண்டும் என வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொன்னை பாலுவுக்கு 5 நாள்கள் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டாா்.