முகப்பு
சென்னை

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: மத்திய அரசு அதிகாரிகளுக்கு அபராதம்

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நபருக்கு தண்டனை குறைப்பு வழங்கியது தொடா்பான விவரங்களை தாக்கல் செய்யாத மத்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 1:10 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நபருக்கு தண்டனை குறைப்பு வழங்கியது தொடா்பான விவரங்களை தாக்கல் செய்யாத மத்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன். இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு 720 கிராம் ஹெராயின் கடத்தியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டாா். பின்னா், அந்நாட்டு நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்திய-இலங்கை இடையேயான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜாகீா் உசேன் இந்தியா கொண்டுவரப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஜாகீா் உசேனை 2022-ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், தொடா்ந்து சிறையில் உள்ள தனது தந்தையை விடுவிக்கக் கோரி, ஜாகீா் உசேனின் மகன் சமீா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஜாகீா் உசேன் தண்டனை விவரங்கள், நாடு கடத்தப்பட்டபோது இந்தியா - இலங்கை இடையிலான கடிதப் போக்குவரத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. ஆனால் மத்திய அரசுத் தரப்பில் அந்த விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவரங்களை தாக்கல் செய்யாத மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை இணைச் செயலா் ஆகிய இருவருக்கும் சோ்த்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனா். இந்த அபராதத் தொகையை 4 வாரங்களுக்குள் உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு அதிகாரிகள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணைய ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments