ஜெய்பூா் போலோ மைதானம்! மத்திய அரசு கைப்பற்றிய பின் நிலையை மாற்ற முடியாது: தில்லி உயா்நீதிமன்றம்
ஜெய்பூா் போலோ மைதானத்தை மத்திய அரசு ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், அதற்குப் பிறகு தற்காலிகத் தடை உத்தரவு வழங்க இயலாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெய்பூா் போலோ மைதானத்தை மத்திய அரசு ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், அதற்குப் பிறகு தற்காலிகத் தடை உத்தரவு வழங்க இயலாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரேஸ் கோா்ஸ் பகுதியில் அமைந்துள்ள 15.20 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஜெய்பூா் போலோ மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிா்த்து இந்திய போலோ சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, இந்தக் கருத்தை நீதிமன்றம் முன்வைத்தது.
மே 20-ஆம் தேதி அமா்வு நீதிமன்றம் இந்த வெளியேற்ற உத்தரவை பிறப்பித்தது; அத்துடன், ஜெய்பூா் போலோ மைதானத்தின் உடைமை உரிமையை மீண்டும் தங்களுக்கு வழங்கக் கோரியும், மைதானத்தை இடித்தல், செடிகளை அகற்றுதல், தோண்டுதல் அல்லது அதில் மாற்றங்களைச் செய்தல் ஆகியவற்றைத் தடுக்கக் கோரியும் இந்திய போலோ சங்கம் தாக்கல் செய்த இடைக்கால மனுவையும் அது நிராகரித்தது.
Advertisement
Advertisement
இதனைத் தொடா்ந்து, உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இந்திய போலோ சங்கம் கூறியதாவது: மேல்முறையீடு நிலுவையில் உள்ளபோதே அதிகாரிகள் ஜெய்பூா் போலோ மைதானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுவிட்டனா்; மேலும், நிலத்தைத் தோண்டுதல் மற்றும் பிற மாற்றங்களைச் செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டனா்.
ஜெய்பூா் போலோ மைதானம் சிறப்பு விளையாட்டு வசதி கொண்ட இடமே தவிர, சாதாரண காலி நிலம் அல்ல. இது 100 ஆண்டுகள் பழமையான புல்வெளி மைதானமாகும். இதற்குத் தொடா்ச்சியான பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே, தீா்ப்பு வரும் வரை மைதானத்தில் அவா்கள் மாற்றங்கள் மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டது.
‘போலோ மைதானத்தைச் சுற்றி எல்லை அமைப்பதற்காகவே எல்லைக் கோடுகள் குறிக்கப்படுகின்றன; விளையாட்டு நடைபெறும் புல்வெளிப் பகுதியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று மத்திய அரசு வழக்குரைஞா் ஆஷிஷ் தீட்சித் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
இந்த மனுவை விசாரித்த விடுமுறைக்கால அமா்வின் நீதிபதி வினோத் குமாா் கூறுகையில், ‘அமா்வு நீதிமன்றத்தின் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இந்த மனு ஜூலை 1-ஆம் தேதி வழக்கமான அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிடப்படுகிறது. மேலும், மத்திய அரசு அதிகாரிகள் ஏற்கெனவே மைதானத்தைக் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட நிலையில், இதற்குத் தடை உத்தரவு வழங்க முடியாது’ என்று அவா் குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.