ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய விஜய்! பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் திடீர் மாற்றம்!!
பிரதமருக்கு எழுதியுள்ள கடித்தத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு வந்த முதல்வர் விஜய் திடீர் மாற்றம் செய்துள்ளதைப் பற்றி...
பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு வந்த முதல்வர் விஜய் திடீர் மாற்றம் செய்துள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்தில், “என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது என்றும், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும், தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்திருப்பதால், இவ்விவகாரம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
Advertisement
Advertisement
இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, அது எவ்வளவு குறைவாக இருப்பினும், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும், இத்தகைய நடவடிக்கை நிதி சார்ந்த அம்சங்களைக் கடந்து, மாநிலத்தின், மாநில மக்களின் நீண்டகால நலன்கள், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிப்பதாக அமையும்.
தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும்” என்று பிரதமருக்கு முதல்வர் விஜய் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்தாண்டுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டிலும், தேர்தலில் பிரசாரங்களிலும் கொள்கை எதிரியென சுட்டிக்காடிய மத்திய பாஜக அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வந்தார்.
திமுக ஆட்சிக்காலத்திலும் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுகவினர் அனைவருமே மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வந்தனர்.
முதல்வராகப் பதவியேற்ற பின்னர், விஜய் பிரதமர் மோடிக்கு அனுப்பிய மீனவர் விடுதலை, பருத்திக்கான வரிக்குறைப்பு உள்ளிட்ட கடிதங்களிலும், ஆளுநர் உரையிலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையின் போது ஒன்றிய அரசு என்றே மத்திய அரசை குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திடீர் மாற்றமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி எழுதியுள்ள கடிதத்தில் ஒன்றிய அரசு என்ற பெயரையும், மத்திய அரசு என்ற பெயரையும் பயன்படுத்தாமல், “இந்திய அரசு” என்ற பெயரை 7 இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையின் போது, மத்திய அரசுடன் தேவையற்ற மோதல்போக்கைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று முதல்வர் விஜய் தெரிவித்திருந்த நிலையில், அதனாலேயே ஆளும் தவெக அரசு, மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ குறிப்பிடாமல் இந்திய அரசு என குறிப்பிடப்போவதாக தகவல் தெரிவிக்கின்றன.
Chief Minister Vijay has made a sudden change regarding the term used to refer to the Central Government; in a letter addressed to Prime Minister Narendra Modi, he has shifted from using the term "Union Government"
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.