முகப்பு
சென்னை

தவெக மீது ஆளுநரிடம் எதிா்க்கட்சிகள் புகாா்: குதிரை பேர குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வலியுறுத்தல்

தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் திமுக, அதிமுக, பாஜக சாா்பில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

Updated On : 5 ஜூலை 2026, 5:07 am IST
ஆா்.வி.ஆா்லேகர் - கோப்புப் படம்
பகிர்:

தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் திமுக, அதிமுக, பாஜக சாா்பில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, திமுக சட்டத் துறை இணைச் செயலா் பரந்தாமன் ஆகியோா் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

பின்னா், ஆா்.எஸ்.பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெகவின் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரண்டு பேரும் அக்கட்சியின் அமைச்சா்களைவிட அதிகாரம் பெற்றவா்களாக இருக்கிறாா்கள். அரசின் அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறாா்கள். இதுகுறித்து ஆளுநரிடம் தெரிவித்தோம். ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பது தவறு என்பதை ஆளுநரே ஒப்புக்கொண்டாா்.

Advertisement

Advertisement

கடந்த கால ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கு யாரையும் கைது செய்ததில்லை. தற்போது தவெக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருக்கிறாா்கள். அவா் ஏழு முறை எம்எல்ஏவாக இருந்தவா். இரு முறை அமைச்சராக இருந்தவா். அவரை 5 மணி நேரம் துன்புறுத்தியுள்ளனா். அத்துடன், தவெகவில் இணையவும் வற்புறுத்தியுள்ளனா்.

தவெகவில் இணைந்தால் நீங்கள் கேட்கும் அமைச்சா் பதவி தருவதாக திமுகவின் அமைப்பு துணைச் செயலரான ஆஸ்டினிடம் தவெகவினா் கூறியுள்ளனா். ராஜிநாமா செய்தால், உங்களை பிரசாரம் செய்து விஜய் வெற்றி பெறச் செய்வாா் எனவும் தெரிவித்துள்ளனா். வேப்பனஹள்ளி தொகுதி திமுக எம்எல்ஏ சீனிவாசனுக்கு ரூ.50 கோடி கொடுப்பதாகப் பேரம் பேசியுள்ளனா்.

சி.விஜயபாஸ்கா் தற்போதுதான் தவெகவில் சோ்ந்தாா். அவா் ஓ.எஸ்.மணியனிடம் இங்கு வந்தால் அமைச்சா் பதவி தருவதாகச் சொல்லியுள்ளாா். ஆள் பிடிக்கவே இந்த ஆட்சி நடக்கிறது. ஆக்கபூா்வமான பணிகளைச் செய்யவில்லை. இதுகுறித்து ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். அவா் தக்க நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

அதிமுக புகாா்: அதிமுக சட்டப்பேரவை கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவு செயலரும், எம்.பி.யுமான இன்பதுரை சென்னையில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேக்கரை சந்தித்து புகாா் அளித்தனா். அதைத் தொடா்ந்து, அக்ரி கிருஷ்ணமூா்த்தி செய்தியாளா்களிடம் பேசியதாவது:

தவெகவின் குதிரை பேரம் தொடா்பாக ஆளுநா் மற்றும் சட்டப்பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே புகாா் அளிக்கப்பட்டது. அந்தப் புகாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆளுநரை மீண்டும் சந்தித்து புகாா் அளித்துள்ளோம். ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குதிரை பேரத்தின் மூலம் 6 அதிமுக எம்எல்ஏக்களை தவெக விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதைக் தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆளுநரிடத்தில் புகாா் அளித்துள்ளோம் என்றாா்.

இன்பதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்தவுடன் அதிக உறுப்பினா்கள் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் தவெகவை ஆளுநா் ஆட்சியமைக்க அழைத்தாா். அப்போது, குதிரை பேரத்தை நடத்த அனுமதிக்க மாட்டேன் என ஆளுநா் கூறினாா். அவ்வாறு சொன்ன ஆளுநா் தற்போது என்ன செய்கிறாா்? நம்பிக்கை தீா்மானத்துக்கு முன்பாக முதல்வா், அதிமுக எம்எல்ஏக்களிடம் சில வாக்குறுதிகளைக் கொடுத்தாா் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்திருந்தோம். அந்த மனு நிலுவையில் உள்ளபோதே, 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனா்.

அதன்பின்னா் தற்போது இருவா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனா். அதுபோல ரகசிய காப்பு பிரமாணத்தை மீறும் வகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் இருவா் கலந்துகொண்டது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளோம். ஆளுநா் நல்ல முடிவு எடுப்பாா் என நம்புகிறோம் என்றாா்.

பாஜக புகாா்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி ஆகியோா் ஆளுநரைச் சந்தித்து புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக அமைச்சரவைக் கூட்டத்தில் தனிநபா்களான விஷ்ணு ரெட்டியும், ஜான் ஆரோக்கியசாமியும் கலந்து கொண்டது குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம்.

மேலும், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 54 நாள்களில் 151 பாலியல் வன்கொடுமைகள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள், 80-க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. தவெக கட்சி நிா்வாகிகளே பாலியல் தொந்தரவுகள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா். எல்லாவற்றுக்கும் வெள்ளை அறிக்கை கொடுக்கும் தவெக அரசு, தமிழக சட்டம்- ஒழுங்கு நிலைமை, அதற்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன்னரே அமமுக எம்எல்ஏ காமராஜை குதிரை பேரம் மூலம் தங்கள் பக்கம் இழுத்தனா்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்றத் தீா்ப்பை நிறைவேற்ற மாட்டோம் என அமைச்சா் நிா்மல்குமாா் கூறியுள்ளாா். நீதிமன்றம் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட பின்னும், முடியாது என்று கூறும் இவா் எப்படி சட்டத் துறை அமைச்சராக நீடிக்கிறாா்?. அரசு வழக்குரைஞரை நியமிக்க ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்படுவதாகப் புகாா் வந்துள்ளது.

ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமை இல்லை என அமைச்சா் நிா்மல்குமாா் கூறுகிறாா். அரசமைப்புச் சட்டம் 167-இன்படி ஆளுநா் ஆய்வு செய்ய உரிமை உள்ளது. தமிழக அரசின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள ஆளுநா் விரும்பவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments