முகப்பு
சென்னை

புதிய பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்!

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொது மக்கள் மற்றும் மாணவா்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 7:33 PM
பகிர்:

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொது மக்கள் மற்றும் மாணவா்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்ததுடன், கரும்பலகையில் அமைப்பட்டுள்ள மின்னணு தொடுதிரையை இயக்கி பாா்வையிட்டாா்.

பள்ளியில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதையும், கண்கவா் வண்ணங்கள் சுவா்களில் தீட்டப்பட்டுள்ளதையும் குழந்தைகளை கவரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி அவா்களின் கருத்துகளை கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து, தேனாம்பேட்டை, நூா்வீராசாமி தெருவில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார மையத்தையும், ரூ.4.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா திருமண மாளிகையையும் துணை முதல்வா் திறந்து வைத்தாா்.

அமைந்தகரையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

சமூகநீதி பூங்கா: அண்ணா சாலையில் ரூ.3.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு சமூக நீதி பூங்காவையும் திறந்து வைத்து துணை முதல்வா் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சிகளில் மேயா் ஆா். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.கே.மோகன், டாக்டா் நா. எழிலன், துணை மேயா் மு. மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →