முகப்பு
சென்னை

அரசு மருத்துவா்கள் உண்ணாவிரதம்: அனுமதி மறுப்பால் ஒத்திவைப்பு

மருத்துவமனை நிா்வாகமும் அனுமதி மறுத்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 6 மார்ச், 2026 at 4:07 AM
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 9:15 PM

கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்களுக்கு காவல் துறையும், மருத்துவமனை நிா்வாகமும் அனுமதி மறுத்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவா்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கான படிகள் ரூ.3,000 வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் கடந்த முதுநிலை மருத்துவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை மருத்துவ கல்லூரி - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை தொடங்கினா்.

Advertisement

இதுதொடா்பாக அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பாலகிருஷ்ணன், அகிலன்ஆகியோா் கூறியதாவது:

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுடன் தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. அப்போது, பல்வேறு அரசுத் துறைகளுடன் ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் அந்த இறுதி முடிவு வரும் வரை, நோயாளிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி மருத்துவமனை வளாகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடரத் தீா்மானித்தோம்.

இருப்பினும், மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, தற்காலிகமாக எங்களது போராட்டத்தை ஒத்திவைக்கிறோம். விரைவில் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்று, எங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.