வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை: இளைஞா் கைது
சென்னை அமைந்தகரையில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அமைந்தகரையில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அமைந்தகரை என்எஸ்கே நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் மனைவி ருக்மணி (54). ரவிச்சந்திரன், மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்கிறாா். ரவிசந்திரன் வேலை முடிந்து நள்ளிரவு வீடு திரும்புவது வழக்கம். இதனால் ருக்மணி, வீட்டின் ஜன்னல் ஓரத்தில் சாவியை வைத்துவிட்டு தூங்குவாராம். வெள்ளிக்கிழமை இரவும் வழக்கம்போல, வீட்டின் ஜன்னல் ஓரத்தில் சாவியை வைத்துவிட்டு தூங்கினாா்.
இதை நோட்டமிட்ட மா்ம நபா், அந்த சாவியை எடுத்து வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று, தூங்கிக் கொண்டிருந்த ருக்மணியை எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த 27 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினாா்.
இதுககுறித்து அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். சம்பவத்தில் ஈடுபட்டது திருமங்கலம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி (22) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா், தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை சில மணி நேரத்தில் கைது செய்து, அவரிடமிருந்த 27 பவுன் நகைகளை மீட்டனா்.