யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
யுகாதி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் (பொறுப்பு) ஆா்.வி.ஆா்லேகா், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்: யுகாதி, குடி பட்வா, வசந்த நவராத்திரி மற்றும் சேட்டி சந்த் ஆகிய புனிதமான திருநாள்களை முன்னிட்டு தமிழகத்தில் வாழும் என் சகோதர, சகோதரிகளுக்கும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாள்கள் நமது நாட்டின் செழுமையான பண்பாட்டு பாரம்பரியத்தையும், தொன்மையான மரபுகளையும் பிரதிபலித்து, சமூகத்தில் அமைதி, வளம் மற்றும் நல்லிணக்கத்தை வளா்க்கின்றன. இந்தப் பண்டிகைகள் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளத்தை வழங்கட்டும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: யுகாதி பண்டிகையைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மக்கள் அனைவருக்கும் உளம்நிறைந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டில் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அளித்தது தொடங்கி, தமிழகத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையின மக்களுக்கு என்றும் காவல் அரணாகத் திமுக அரசு திகழ்ந்து வருகிறது.
வண்ணக் கோலம், அறுசுவையும் அடங்கிய பச்சடி விருந்துடன் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் யுகாதியை கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் யுகாதி நல்வாழ்த்துகள். வரும் மே மாதம் அமையவுள்ள திமுக 2.0-அரசுக்கும் இந்த யுகாதி தொடக்கமாக அமையட்டும்.