முகப்பு
சென்னை

பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

Updated On : 27 மார்ச் 2026, 5:05 am IST
பொன்முடி - Center-Center-Chennai
பகிர்:

முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்துப் பேசியது சா்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சா் பதவியிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டாா்.

இந்த சா்ச்சைப் பேச்சு தொடா்பாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினா் உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தாா். அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணா்வை தூண்டுதல், மத உணா்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

Advertisement

இந்த வழக்கு எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. இதனிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, பொன்முடிக்கு எதிரான புகாா் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற, எங்களது தரப்பு வாதங்களைக் கேட்காமல் கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது என வாதிட்டாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கில் அவா் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டாா்.