காஞ்சிபுரம்

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
 காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தபோது செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
இம்மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2016-17-ஆம் ஆண்டில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. ஒரு கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக் குடில் நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், 45 இடங்களில் அங்கன்வாடிகள் கட்டுவதற்கு ரூ. 3 கோடியை 15 லட்சம் நிதி ஒதுக்கி, 2 பணிகள் முடிவடைந்துள்ளன. 43 பணிகள் நடைபெற்று வருகின்றன.
இலவச கறவை மாடுகள் பெற்றவர்களுக்கு மாட்டு கொட்டகை அமைப்பதற்கு ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் 132 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 121 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
 வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கத்தில் ரூ. 21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பசுமைக் குடில் பண்ணை நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 4 லட்சம் மரக்கன்றுகள் ஊராட்சி பொது இடத்தில் நடுவதற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
 காஞ்சிபுரம் ஒன்றியம் கிளார் ஊராட்சியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் அடிப்படை பொது அறிவை மேம்படுத்தும் வகையில் பழங்கள் வகைகள் உணவு வகைகள், காய்கறிகள், பூக்கள், வாகனங்கள் குறித்து சுவரில் படங்கள் வரையப்பட்டு குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டு உபகரணங்களுடன் விளையாடுமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
 ரூ. 14.40 லட்சம் மதிப்பீட்டில் களக்காட்டூரில் பிளாக் பிளான்டேஷனில், 120 மாமரக்கன்றுகள் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்படுகிறது. காளூரில் ரூ. 12.33 லட்சம் மதிப்பீட்டில் 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றார்.
 ஆய்வின்போது, செயற்பொறியாளர்கள் தணிகாசலம், கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

SCROLL FOR NEXT