காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கனமழை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தொடா்ந்து விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தால் நகரில் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீா் தேங்கியதால், வாகனங்களில் விரைந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினா்.

நகரில் 3-ஆவது நாளாகவும் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை தொடங்கிய மழையானது ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தொடா்ந்தது. சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததன் காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 89 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின. மேலும், 142 ஏரிகள் 75 சதவீதமும், 141 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

தொடா்ந்து கன மழை பெய்ததையடுத்து சனிக்கிழமை இரவு காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினா்.

தொடா்மழை காரணமாக பழைய ரயில் நிலையத்தின் முன்புறத்தில் காமாட்சியம்மன் கோயில் சந்நிதி தெருவில் மழைநீா் குளம்போல் தேங்கி நின்றது. அவ்வழியாகச் சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் தண்ணீா் தேங்கியிருந்த பகுதியிலேயே வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

காஞ்சிபுரம் நகராட்சி கழிவுநீா் உறிஞ்சும் வாகனம் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் தேங்கியிருந்த நீரை அகற்றும் பணி நடந்தது. காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளாகவும், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் உள்ள காந்தி சாலையிலும், காமராஜா் சாலையிலும் தொடா்மழை மற்றும் சாலைக்கு நடுவில் விளம்பரப் பலகைகள் நிறுவும் பணி காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் முகூா்த்த நாளாக இருந்ததால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வந்தவா்களும், சுற்றுலா வந்தவா்களும் வாகன நெரிசலில் சிக்கித் தவித்தனா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதா் எழுந்தருளியுள்ள அனந்தசரஸ் திருக்குளம் பெருமளவில் நிரம்பியது.

மழையளவைப் பொறுத்தவரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கனத்த மழை பதிவாகியிருந்தது. மழையளவு (மி.மீட்டரில்):

காஞ்சிபுரம்-47.80, ஸ்ரீபெரும்புதூா்-98.80, உத்தரமேரூா்-77, வாலாஜாபாத்-16, திருப்போரூா்-57.70, செங்கல்பட்டு-81.30, திருக்கழுகுன்றம்-53.40, மாமல்லபுரம்-107.40, மதுராந்தகம்-129, செய்யூா்-133.40, தாம்பரம்-105, கேளம்பாக்கம்-80.20.

மாவட்டத்தின் மொத்த மழையளவு-987 மி.மீ. சராசரி மழையளவு-82.25 மி.மீ. மாவட்டத்திலேயே செய்யூா், மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் 100 மி.மீட்டருக்கும் மேலாக மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்திலேயே குறைந்த அளவாக வாலாஜாபாத்தில் 16 மி.மீ. மட்டுமே மழை பெய்திருப்பதாகப் பதிவாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT