பிப்.18,19-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம்
மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டம் குறித்து பிப்.18,19 ஆகிய நாள்களில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டம் குறித்து பிப்.18,19 ஆகிய நாள்களில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர். இத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறிவொளி தீபம் கலைக்குழுவினர் மூலம் பிப்ரவரி 18, 19 ஆகிய இரண்டு நாள்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு அலுவலகத்தில் செயல்படுத்தும் திட்டங்கள், பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தும் திட்டங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் செய்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன.
பிப்.18 -ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்கப்படும். இதைத்தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம், பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெறும். இதையடுத்து, 19- ஆம் தேதி காலை 10 மணிக்கு செங்கல்பட்டு பேருந்து நிலையம், நண்பகல் 12 மணிக்கு நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வுப் பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.