காஞ்சிபுரம்

உத்தரமேரூர் அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கண்டெடுப்பு

DIN


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள அனுமந்தண்டலம் கிராமத்தில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் வீரன் சிலை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
தமிழகத்தில் நடுகல் வைக்கும் பழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளது. இது குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன. நடுகல் என்பது போரில் வீரமரணம் அடைந்த வீரன் நினைவாக அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் அவ்வீரனின் உருவத்தை ஒரு கல்லில் சிற்பமாக செதுக்கி வழிபடும் முறையாகக் கருதப்படுகிறது. 
இதனை வீரக்கல் என்றும் அழைத்துள்ளனர். அனுமந்தண்டலம் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் பாலாஜி தலைமையில் யுவராஜ், கோகுல சூர்யா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டபோது இச்சிலையை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் சு.பாலாஜி கூறியது:
எங்களது கள ஆய்வில்  கண்டறிந்த நடுகல் வீரன் சிலையானது ஊரின் மைதானத்தில் அரச மரத்தடியில் ஒரு கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. 80 செ.மீ.உயரம், 65 செ.மீ. அகலம் கொண்ட இவ்வீரனது  வலக்கையில் கேடயமும், இடக்கையில் வாளும் உள்ளது. 
முகமானது வலப்பக்கம் திரும்பியும் பாதங்கள் வளைந்து போருக்குச் செல்லும் வீரனைப் போன்று காட்சியளிக்கிறது. இவ்வீரனது கழுத்தில் அணிகலன்கள், கைகளில் காப்பு, இடையில் அரையாடை, பாதங்களில் வளையங்களும் அலங்கரிக்கின்றன. இக்கிராம மக்கள் இது மதுரைவீரன் சிலையாக இருக்கலாம் என்கின்றனர். 
அனுமந்தண்டலம் கிராமமானது பல்லவர்கள் ஆட்சியின் கீழ் இருந்ததாலும், இதே ஊரில் பல்லவர் கால கொற்றவை தேவி சிலை ஏற்கனவே கண்டறியப்பட்டிருப்பதாலும் இவ்வீரனின் உருவம், அமைப்பு, வடிவம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த நடுகல்லானது 8-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமான பிற்காலப் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. 
உத்தரமேரூர் பகுதியானது பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் ஆண்ட பகுதியாகும். தற்போது இப்பகுதியில் நடுகல் முதன் முதலாக கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT