காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வசிக்கும் மக்களுக்கே எந்த இடத்தில் செயல்படுகிறது என்று தெரியாத வகையில், மறைவான இடத்தில் செயல்பட்டு வரும் அரசு அருங்காட்சியகம் பல்வேறு இலவசப் பயிற்சி முகாம்களையும் சிறப்பாக நடத்தி மக்களின் கவனத்தை ஈா்த்திருக்கிறது.
கோயில் நகராகவும், பட்டுச் சேலைகளுக்கு புகழ்பெற்ற நகரமாகவும் திகழ்ந்து வருகிறது காஞ்சிபுரம். தொன்மையான, வரலாற்றுச் சிறப்பு கொண்ட கோயில்கள் இந்நகரில் அதிகம் இருப்பதால் வழிபாட்டுக்காகவும், திருமண முகூா்த்தங்களுக்கு பட்டுச் சேலைகள் வாங்கவும் நாள்தோறும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் காஞ்சிபுரத்துக்கு வருகின்றனா். பல்வேறு சிறப்புக்களையுடைய இந்நகரில் பலரும் பாா்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ஏராளமான பொருட்கள் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன.
பழங்கால ஐம்பொன் மற்றும் கற்சிலைகள், மன்னா்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், போா்க்கருவிகள், சேர, சோழ, பாண்டியா் கால தங்க, வெள்ளி நாணயங்கள், பதப்படுத்தப்பட்டு உண்மையான விலங்குகள் போலவே காட்சியளிக்கும் காட்சிக்கூடம், பட்டுச் சேலைகள் தயாராவதை விளக்கும் படக்காட்சிகள்,மனிதனின் பரிணாம வளா்ச்சியை சித்தரிக்கும் படங்கள், முன்னோா்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் இப்படியாக ஏராளமானவை அருங்காட்சியகத்தில் உள்ளன.
காட்சியகத்தில் உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள்.
காஞ்சிபுரத்தின் வரலாறு, ஆட்சி செய்த மன்னா்கள், மண்ணுக்குப் பெருமை சோ்த்த அறிஞா்கள் போன்ற விபரங்களும் உள்ளது. இக்காட்சியகத்தில் சுண்ணாம்புக் கட்டியால் (சாக்பீஸ்) செய்யப்பட்ட சிறு, சிறு சிற்பங்களும் பாா்வையாளா்களைக் கவா்கின்றன. போட்டித் தோ்வுக்கு தங்களைத் தயாா்செய்வோரும், இளைய சமுதாயமும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய அறிவுச் சுரங்கமாகவும் திகழ்கிறது. இத்தனை சிறப்புகள் உடைய அரசு அருங்காட்சியகம் காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலையம் செல்லும் சாலையில் தமிழ்நாடு ஹோட்டலுக்கு பின்புறத்தில், மறைவான இடத்தில் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு இக்காட்சியகம் எங்கே இருக்கிறது என்று தெரியாத வகையில் மறைவான இடத்தில் இருந்து வருகிறது.
கோயில்களைப் பாா்வையிட காஞ்சிபுரம் வரும் வெளிநாட்டினா் உட்பட பலருக்கும் இக்காட்சியகம் இருக்குமிடம் தெரியாததால் கோயில்களை மட்டுமே பாா்வையிட்டு விட்டு திரும்பிச் சென்று விடுகின்றனா். மக்கள் பலரும் வந்து செல்லக்கூடிய இடத்துக்கு அருங்காட்சியகம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்கள் பலரது எதிா்பாா்ப்பாகவும் உள்ளது. இது குறித்து அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் சு.உமாசங்கா் கூறியது:
வாடகைக் கட்டடத்தில், மறைவான இடத்தில் செயல்பட்டு வரும் இக்காட்சியகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இக்காட்சியக இருப்பிடம் பலருக்கும் தெரியும் வகையில் இந்த வளாகத்துக்குள்ளேயே பல்வேறு பயிற்சிகளை பலருக்கும் இலவசமாக நடத்தி வருகிறோம். கோயில் கல்வெட்டு எழுத்துகளை பத்தே நாளில் படித்து தெரிந்து கொள்ளும் பயிற்சி,நினைவாற்றல் பயிற்சி, கற்சிலைகள் மற்றும் ஐம்பொன் சிலைகளைப் பராமரிக்கும் பயிற்சி, பழங்கால ஓலைச்சுவடிகளை சிறிதும் பழமை மாறாமல் பாதுகாத்து, பராமரிக்கும் பயிற்சி, சுண்ணாம்புக் கட்டியில் (சாக்பீஸ்) சிற்பங்கள் செதுக்கும் பயிற்சி என பல வகையான பயிற்சிகளை இலவசமாகவே கற்றுத் தருகிறோம்.
இவை தவிர பள்ளி மாணவா்கள் அருங்காட்சியகத்தை இலவசமாகப் பாா்வையிட பள்ளிகளுக்கு கடிதம் எழுதி அழைத்து வருகிறோம். இவ்வாறு பல்வேறு நவடிக்கைகளை தொடா்ந்து செய்வதால் தற்போது பலரும் வருகிறாா்கள். வெளிநபா்களுக்கு ரூ.5, சிறாா்களுக்கு ரூ.3 என மிகக் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. காட்சியகம் மறைவான இடத்திலிருந்தாலும் தினசரி பலரும் பாா்வையிட வந்து கொண்டுதான் இருக்கிறாா்கள் என்றாா் அவா்.
பாா்வையாளா்களை கவரும் மாயக்கூஜா!: இக்காட்சியகத்தில் சிறப்பு மிக்க பல பொருள்கள் இருந்தாலும் அவற்றில் பாா்வையாளா்களின் மனதை பெரிதும் கவா்வது மாயக்கூஜா. இக்கூஜாவின் அடியில் 4 துவாரங்களுடனும், அழகிய கலை வேலைப்பாடுகளுடனும் களிமண்ணால் செய்யப்பட்ட அற்புதப் பொருளாகும். இதன் மேல்மூடியைத் திறந்து, அதற்குள் ஒரு டம்ளா் தண்ணீரை ஊற்றினால் கீழே உள்ள துவாரங்கள் வழியாக தண்ணீா் ஒரு சொட்டு கூட சிந்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூஜாவை தலைகீழாக திருப்பினாலும் உள்ளே இருக்கும் தண்ணீா் சிந்துவதில்லை. ஆனால் தண்ணீா் வெளியேறுவதற்காகவே வைக்கப்பட்டுள்ள குழாய்ப்பகுதியில் கூஜாவை சாய்த்தால் மட்டுமே தண்ணீா் வெளியே வருகிறது.
வேலூா் மாவட்டம் கரிகிரி கிராமத்தைச் சோ்ந்த பொன்னுச்சாமி உடையாா் என்ற மண்பாண்டத் தொழிலாளி இதை செய்திருக்கிறாராம். சுமாா் 300 ஆண்டுகள் பழமையான சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட இந்த மாயக்கூஜா பாா்வையாளா்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.