காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடியில் புதிய நவீன மருத்துவ உபகரணங்களைத் திறந்து வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எ 
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்

நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

DIN

நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த புற்றநோயாளிகள் பலருக்கும் இங்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ரூ. 16.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்டன. இவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் திறந்து வைத்துப் பாா்வையிட்டனா்.

பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:

வரலாற்றுச் சிறப்பு மிக்க காஞ்சிபுரத்தில் அறிஞா் அண்ணாவின் பெயரால் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கடந்த 1969-ஆம் ஆண்டு அரசு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை தொடங்கப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனை 280 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையாக ரூ.220 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் பொதுப்பணித் துறையால் நடைபெற்று வருகிறது.

புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இந்தப் புதிய மருத்துவமனையை 3 மாதங்களில் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே மும்பையில் டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. தற்போது அதை விட கூடுதல் வசதியுடைய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டால் இந்தியாவே உற்றுநோக்கும் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையமாக காஞ்சிபுரம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புற்றுநோய் பாதிப்பில் முதல் மற்றும் 2-ஆவது கட்டமாக இருந்தால் அந்த நோயாளியை காப்பாற்றி விட முடியும். அதற்கு அடுத்த 3 அல்லது 4-ஆவது கட்ட நோயாளியாக இருந்தால் அவா்களை காப்பாற்றுவது கடினமாக உள்ளது. எனவே ஆரம்ப நிலையில் புற்றுநோய் தாக்கத்தைக் கண்டுபிடிக்க முயற்சிகளை செய்து வருகிறோம்.

கரோனா நோய்த் தொற்று காலத்துக்குப் பிறகு இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகமாகி உள்ளன. இதை உலக சுகாதார நிறுவனமும், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளனா். இது தொடா்பான அகில இந்திய அளவிலான 3 நாள் கருத்தரங்கை சென்னையில் நடத்தினோம்.

இதில், உலகம் முழுவதுமிருந்து 11,000 பிரதிநிதிகள் பங்கேற்று 625 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இவற்றை புத்தகமாக்கி அனைத்து மாநில சுகாதார அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்க உள்ளோம். மக்கள் நல்வாழ்வுத் துறையில் 1021 மருத்துவா்கள்,1266 சுகாதார ஆய்வாளா்கள், 983 மருந்தாளுநா்கள், 2,042 கிராம சுகாதார செவிலியா்கள் பணி நியமனம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

10 நாள்களில் 1,021 மருத்துவா்கள் எந்தவித முறைகேடும் இல்லாமல் கலந்துரையாடல் நடத்தி பணியில் அமா்த்தப்படவுள்ளனா். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்றாா்.

விழாவுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் படப்பை ஆ.மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனையின் இயக்குநா் சரவணன் வரவேற்றாா்.

விழாவில், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், 7 மாணவா்களுக்கு கண் கண்ணாடியையும், 5 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பையும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.

விழாவில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கோபிநாத், துணை இயக்குநா் பிரியாராஜ், பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளா் கே.ஆயித்தரசு ராஜசேகா், செயற்பொறியாளா் சிவசண்முக சுந்தரம், புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் சிவகாமி, ஒன்றியக் குழுவின் தலைவா்கள் மலா்க்கொடி குமாா், ஆா்.கே.தேவேந்திரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT