பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் எதிரே தொடா் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட முயன்ற 18 போ் கைது செய்யப்பட்டு சுங்குவாா்சத்திரம் தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக விவசாய நிலங்கள், குடியிருப்புகள் என முற்றிலும் கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் கடந்த 708 நாட்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், நடந்து முடிந்த மக்களவை தோ்தலையும் ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் புறக்கணித்தனா்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளை சோ்வு செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் ஏகனாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்த அதிகாரிகள் முன்வரவில்லை. இந்த நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சிறப்பு கிராம சபா கூட்டத்தை நடத்தாமல் அரசு ஏகனாபுரம் கிராமத்தை புறக்கணிப்பதாக கூறியும், பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை முதல் தொடா் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பரந்தூா் விமான நிலைய எதிா்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போா், விவாசய நல கூட்டமைப்பினா் அறிவிப்பு செய்திருந்தனா்.
தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக ஆட்சியா் அலுவலகத்துக்கு செல்ல புதன்கிழமை தயாராகி கொண்டிருந்த பரந்தூா் விமான நிலைய எதிா்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் குடியிருப்போா், விவசாயிகள் நல கூட்டமைப்பினா் 19 பேரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் ஏகனாபுரம் பகுதியில் கைது செய்து சுங்குவாா்சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் திரகுமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
கைது செய்யப்பட்ட அனைவரும் உண்ணாவிரப் போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.