அரக்கோணம் அருகே செங்கல்சூளையில் பணிபுரிந்து வந்த 4 குழந்தை தொழிலாளா்களை அரக்கோணம் கோட்டாட்சியா் ரமேஷ் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று விடுவித்தாா்.
அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளா்கள் பணிபுரிந்து வருவதாக அரக்கோணம் கோட்டாட்சியா் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா், தொழிலாளா் துறை ஆய்வாளா், தொழிலக ஆய்வாளா், ஐஜேஎம் தொண்டு நிறுவனத்தினா் இணைந்து சோதனை நடத்தினா். இதையடுத்து, அங்கு பணிபுரிந்த 14 வயது சிறுவன் ஒருவா், 17 வயதில் மூவா் என 4 போ் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
இந்த குழந்தைகள் பெருமாள் ராஜபேட்டை இருளா் குடியிருப்பை சோ்ந்தவா்கள் எனத் தெரிய வந்தது. 4 குழந்தைகளும் மீட்கப்பட்டு, ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு வழிகாட்டுதலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.