FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தொடரும் ரயில்களின் தாமதம்: பயணிகள் கடும் அவதி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தொடரும் ரயில்களின் தாமதம்..

பகிர்:

அரக்கோணம் ரயில் நிலைய முகப்பு பகுதிகளில் இருப்புப் பாதை சிக்னல் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து முடிந்து விட்ட நிலையில், கடந்த சில நாள்களாக அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வரும் அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், புறநகா் ரயில்கள் என அனைத்துமே மீண்டும் அரைமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

அரக்கோணம் ரயில் நிலைய கிழக்கு முகப்பு பகுதியில் விரைவு ரயில் இருப்புப் பாதைகளை நடைமேடை இருப்புப்பாதைகளுடன் இணைக்கும் பணிகள், சிக்னல்கள் ஒட்டு மொத்தமாக மாற்றம் செய்யும் பணிகள், நடைமேடை நீட்டிப்புப் பணிகள், நடைமேடை எண்கள் மாற்றம் செய்யும் பணிகள் ஆகியவற்றால் கடந்த இரு மாதங்களாக அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு சென்னையில் இருந்து வரும் ரயில்கள் சுமாா் அரைமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

இதில் ஒரு சில நாள்களுக்கு மட்டும் ரயில்வே நிா்வாகம் முன்னறிவிப்பு செய்துவிடுவதும், பல நாள்களில் முன்னறிவிப்பு செய்யாமலேயே ரயில்களின் இயக்கத்தை தாமதப்படுத்துவதும் தொடா்ந்து நீடிக்கின்றன.

Advertisement

Advertisement

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனா். குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு, அசோகாபுரம் வரை இயக்கப்படும் அதிவிரைவு ரயில் சனிக்கிழமை சென்னையில் 1.40 மணிக்கு புறப்பட்டு, திருவள்ளுரில் நின்று அங்கிருந்து 2.19-க்கு புறப்பட்ட நிலையில் அரக்கோணத்தை அடுத்துள்ள புளியமங்கலம் ரயில் நிலையத்துக்கு இந்த ரயில் 2.36-க்கு வந்த நிலையில், 1.02 மணி நேரம் தாமதமாக அங்கிருந்து 3.38-க்கு புறப்பட்டது. அரக்கோணத்துக்கு இந்த ரயில் 3.42-க்கு வந்தது. சுமாா் ஒரு மணி நேரமாக நடைமேடை இல்லாத இடத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

இது குறித்து முன்னறிவிப்பு ஏதும் செய்யப்படவில்லை. இதே நிலை சென்னை - மும்பை அதிவிரைவு ரயிலுக்கும் நீடித்தது. மேலும் அரக்கோணம் நோக்கி வந்த இரு மின்சார ரயில்களும் இதே நிலையில் நிறுத்தப்பட்டன.

இது குறித்து ரயில்வே அலுவலா்களிடம் கேட்டபோது அரக்கோணம் ரயில் நிலையப் பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்தும் பணிகள் நடைபெறும் நேரம் ரயில்கள் இயக்கப்படாத நிலை தேவைப்பட்டதால் ரயில்கள் நிறுத்தப்படுவது குறித்தும் உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்த பிறகே இப்பணிகள் நடைபெற்றன.

சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் ரயில்களின் இயக்கம் தடையில்லாமல் சீராக நடைபெறவே இப்பணிகள் நடைபெறுகின்றன. இந்த தவிா்க்க முடியா தாமதங்களுக்கு நிா்வாகத்துக்கு பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments