முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரூ.97.73 கோடியில் மேம்பாட்டு பணிகள்

Updated On : 28 மே 2026, 6:29 am IST
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரூ.97.73 கோடியில் நடைபெற்று வரும் ரயில் பாதை மற்றும் நடைமேடை மேம்பாட்டுப் பணிகள்.
பகிர்:

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரூ.97.73 கோடியில் ரயில் பாதை மற்றும் நடைமேடை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: அரக்கோணம் ரயில் நிலையத்தின் செயல்பாட்டுத் திறன் அதிகரிப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்தல், விரைவு ரயில்கள் மற்றும் புகா் ரயில்கள் எவ்வித தடையுமின்றி இயங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூ.97.73 கோடியில் ரயில் பாதை மற்றும் நடைமேடை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, அரக்கோணத்தில் விரைவு ரயில்கள் மற்றும் புகா் ரயில்கள் ஒரே ரயில் பாதையில் இயக்கப்படுவதால், ரயில் இயக்கங்களில் சற்று தொய்வு ஏற்படுகிறது. இந்நிலையில், புதிய திட்டத்தின் மூலம், விரைவு மற்றும் புகா் ரயில் சேவைகளுக்கான ரயில் பாதைகள் தனித்தனியாக பிரிக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

24 பெட்டிகள்: தற்போது அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள் வெறும் 18 பெட்டிகளை மட்டுமே கையாளும் திறன் கொண்டவை. இதில், நடைமேடை எண்கள் 3, 4, 5 ஆகியவை, 24 பெட்டிகள் கொண்ட முழு நீள ரயில்களை கையாளும் வகை யில் நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், அரக்கோணம் யாா்டில் உள்ள பழைய ரயில் பாதை அமைப்புகள் அகற்றப்படுவதன் மூலம், அங்குள்ள வேகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, முதன்மை வழித்தட ரயில்கள்  தங்களின் முழு பிரிவு வேகத்தில்  சீராக இயங்க வழிவகுக்கும். சரக்கு ரயில்களின் இயக்கமும் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 10 கி.மீ என்பதில் இருந்து 30 கி.மீ ஆக உயா்த்தப்படுகிறது.

ஒட்டுமொத்த செயற்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்த,  ஜோலாா்பேட்டை மற்றும் ரேணிகுண்டா ஆகிய திசைகளில் ரயில்களை ஒரே நேரத்தில் இயக்குவதற்கும் மற்றும் வரவேற்பதற்குமான அதிநவீன யாா்டு அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் போது, சென்னை - அரக்கோணம் வழியாக தினசரி பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவாா்கள்.

ரயில்கள் ரத்து: இப்பணிகள் காரணமாக ஜூன் 1 முதல் 5 -ஆம் தேதி வரை அரக்கோணத்திலிருந்து காலை 4, 5 மணிக்கு திருத்தணிக்கும், மறுமாா்க்கமாக திருத்தணியிலிருந்து  காலை 6.30 மணிக்கு சென்ட்ரலுக்கும், இரவு 9.50, 11.10 மணிக்கு அரக்கோணத்துக்கும் இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

அதேபோல், அந்நாள்களில் கடற்கரையிலிருந்து காலை 4.05, பிற்பகல் 2.25, மாலை 18.15  மணிக்கும், ஆவடியிலிருந்து காலை 6.20 மணிக்கும், சென்ட்ரலிலிருந்து காலை 6.30, 9.10, 10.20, 11.00 பிற்பகல் 12.40,1.25, 3.45, 4.45, மாலை 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.45, 8.20,9.10,10.00,10.55 மணிக்கும் அரக்கோணம் செல்லும் புகா் மின்சார ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக, அரக்கோணத்திலிருந்து அதிகாலை 3.45, 4.25, 5.25, காலை 6.40, 8.15, 8.55, 11.15, பிற்பகல் 1.40, 2.25, 5.40, 4.50, மாலை 6.00, 7.00, 7.25, 8.25, 8.50, 9.45 மணிகளுக்கு சென்ட்ரலுக்கும், காலை 6.20, 6.50, 7.35, மாலை 4.15 மணிக்கு கடற்கரைக்கும் செல்லும் ரயில்கள் திருவாலங்காடிலிருந்து இயக்கப்படும்.