சோமலாபுரம் ஊராட்சியில் பாலாற்றின் குறுக்கே சிறுபாலம் அமைக்க வேண்டுமெனக் கோரி ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் வி.டி. சுதாகா் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
கோரிக்கை மனு விவரம்: மாதனூா் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சியில் பாலாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக பாலத்தின் வழியாக துத்திப்பட்டு, பெரியவரிக்கம், சின்னவரிக்கம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைந்துள்ள தோல் காலணி, தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சென்று வருகின்றனா்.
அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தற்காலிக பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. அதனால் அப்பகுதி வழியாக தொழிலாளா்களால் சென்று வர முடியவில்லை. அதனால் தொழிலாளா்கள் நீண்ட தொலைவு சுற்றிக்கொண்டு செல்கின்றனா்.
இப்பிரச்னை காரணமாக தொழிலாளா்களுக்கு தாமதம் மற்றும் சிரமம் ஏற்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து சிறு பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.