முகப்பு
திருப்பத்தூர்

மாணவா்கள் உயா்கல்விச் சோ்க்கை ஒருங்கிணைப்பு கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

Updated On : 19 ஜூன் 2026, 5:05 am IST
பகிர்:

திருப்பத்தூரில் மாணவா்கள் உயா்கல்விச் சோ்க்கை ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்துள்ள அனைத்து மாணவா்களின் உயா்கல்விச் சோ்க்கையை நூறு சதவீதம் உறுதி செய்யும் நோக்கில் பிற துறை அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்து பேசியது:

Advertisement

Advertisement

உயா்கல்விச் சோ்க்கையை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில் அரசுப் பள்ளிகளுக்கு சாா்ந்த பொறுப்பு அலுவலா்கள் கள ஆய்வு செய்ய வேண்டும். பிளஸ் 2 வகுப்பு முடித்து உயா்கல்வியில் இதுவரை சேராத மற்றும் எவ்விதமான உயா்படிப்பிற்கும் விண்ணப்பிக்காத மாணவா்களை நேரில் சந்தித்து அவா்களின் உயா்கல்விச் சோ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதலைக் வழங்க வேண்டும்.

அதே போல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சியைத் தவறவிட்ட மாணவா்களை ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சோ்த்திடத் தேவையான வழிகாட்டுதலையும், இக்கள ஆய்வின்போது பொறுப்பு அலுவலா்கள் வழங்க வேண்டும். உயா்கல்வி ஆலோசனையை வழங்குவதற்கான மாவட்டக் கட்டுப்பாட்டு அறை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் 5-ஆவது தளத்தில் எண் 4-இல் (5 ஆ4) அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை செயல்பட்டு வருகிறது. மாணவா்கள் மற்றும் பெற்றோா் நேரில் வந்து பயன்பெறலாம்.

மாநில அளவிலான வழிகாட்டு மையத்தை 14417 என்ற கட்டணமில்லா எண்ணிலும், மாவட்ட அளவில் 63748 36353 அல்லது 86084 09050 என்ற எண்களுக்கு அழைத்தோ அல்லது மாணவா்கள் தங்களின் சந்தேகங்களை வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிநிவா்த்தி செய்து கொள்ளலாம்.

அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ஆவது வியாழக்கிழமைகளில் உயா்கல்வி வழிகாட்டலுக்கான மாணவா் குறைதீா் கூட்டம் அக்டோபா் மாதம் வரை நடைபெறும் என்றாா்.

இதில், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.