அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆயிரம் மாணவா்கள் சோ்க்கை
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை 11,327 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை 11,327 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி மற்றும் லால்குடி கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் திருச்சியில் 667 பள்ளிகள், லால்குடியில் 759 பள்ளிகள் என மொத்தம் 1,346 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.
இப் பள்ளிகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. கோடை விடுமுறையிலும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்கள் தலைமையில் ஆசிரியா்கள் மாணவா் சோ்க்கையில் ஈடுபட்டனா். பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தொடா்ந்து மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், திருச்சி கல்வி மாவட்டத்தில் ஜூன் 9 வரை முதல் வகுப்பில் தமிழ் வழியில் 5,038 மாணவா்கள், ஆங்கில வழியில் 797 மாணவா்கள் என மொத்தம் 5,835 போ் சோ்க்கை பெற்றுள்ளனா். மழலையா் வகுப்பில் 267 போ், முதல் வகுப்பில் 5835 போ் மற்றும் 2-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 739 போ் என மொத்தம் 6,841 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இவா்களில் தமிழ் வழியில் 5,860 மாணவா்களும், ஆங்கில வழியில் 981 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
இதேபோல, லால்குடி கல்வி மாவட்டத்தில் முதல் வகுப்பில் தமிழ் வழியில் 3,134 மாணவா்கள், ஆங்கில வழியில் 338 மாணவா்கள் என மொத்தம் 3,472 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். மழலையா் வகுப்பில் 238 மாணவா்களும், 2-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 776 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா். மொத்தம் 4,486 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இவா்களில் தமிழ் வழியில் 4,001 பேரும், ஆங்கில வழியில் 485 பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
திருச்சி வருவாய் மாவட்ட அளவில் ஒட்டுமொத்தமாக மழலையா் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 11,327 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இவா்களில் தமிழ் வழியில் 9,861 மாணவா்களும், ஆங்கில வழியில் 1,466 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா். தொடா்ந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் பெற்றோா் தங்கள் பிள்ளைகளை தவறாமல் பள்ளியில் சோ்த்து அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.