திருவள்ளூர்

சென்னை மெட்ரோ ரயிலை செங்குன்றம் வரை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயிலை செங்குன்றம் வரை இயக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சென்னை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் இயங்குகிறது. இந்நிலையில், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இத்திட்டத்தைக் கொண்டு வரப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மாதவரம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், மாதவரம் மேம்பாலம் அருகே ஆந்திர மாநிலப் பேருந்துகளை நிறுத்தவும், ரூ. 95 கோடியில் அடுக்குமாடி பேருந்து நிலையம் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. 
ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பேருந்துகளும், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகளும் செங்குன்றத்தில் நின்று சென்னையை நோக்கிச் செல்லும் நிலை உள்ளது. இதனால் மாதவரம் மேம்பாலப் பகுதியில் ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகளை நிறுத்த புதிய கட்டடம் கட்டி வருவது மிகுந்த பயனுடையதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். அதேபோல், மெட்ரோ ரயில் திட்டத்தை செங்குன்றம் வரை கொண்டுவர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர் சசிதரன் கூறியது:
மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அதை திருவொற்றியூர் மற்றும் மாதவரம் வரை சுரங்க வழி மற்றும் ஆகாய வழியாக இயக்கத் திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம், மாதவரம் வரை விரிவடைந்துள்ளது. 
இதில் பாடி, ரெட்டேரி மற்றும் மாதவரம் மேம்பாலம் என மெட்ரோ ரயில் நின்று செல்லும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தை செங்குன்றம் வரை விரிவுபடுத்தி, புழல், காவாங்கரை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ 
கோ.ரவிராஜ் கூறியது: மெட்ரோ ரயிலை இயக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. தமிழக அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை புறநகர்ப் பகுதியான செங்குன்றம் வரை இயக்க வேண்டும். அனல் பறக்கும் வெயில் காலத்தில் குளிர்சாதனப் பேருந்துகளை இயக்க வேண்டும். 
செங்குன்றம்-தாம்பரம் இடையே இயங்கி வந்த குளிர்சாதனப் பேருந்துகளை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பயன்படுத்தி வந்தனர். ஆனால் போக்குவரத்துத் துறையினர் திடீரென அப்பேருந்துகளை நிறுத்தி விட்டனர். 
பின்னர், தாம்பரம் வரை இயங்கிய சாதாரண பேருந்துகளையும் ரத்து செய்து, அனைத்துப் பேருந்துகளையும் கோயம்பேடு வரை மட்டுமே இயக்குகின்றனர். இதனால், பயணிகளுக்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயிலை செங்குன்றம் வரையில் இயக்கினால் பொதுமக்களுக்கு சிரமம் குறையும் என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT