முகப்பு
திருவள்ளூர்

கோயில் குளத்தை மண் கொட்டி மூடியதாக 2 பேர் கைது

புழல் அருகே, கோயில் குளத்தை மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

புழல் அருகே, கோயில் குளத்தை மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 
சென்னை புழலில் 22 ஆவது வார்டு சிவராஜ் தெருவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்குச் சொந்தமான குளம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 
நீண்ட காலமாக இக்குளம் பராமரிப்பின்றி கிடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவோடு இரவாக சிலர் குளத்தில் மண்போட்டு மூடி, குளம் இருந்த சுவடு தெரியாமல் மறைத்து விட்டார்களாம். 
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் குளத்தில் மண் நிரப்பியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சென்னை - பாடியிலுள்ள அறநிலையத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் குமரேசன், மாதவரம் துணை வட்டாட்சியர் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் வரைபடங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். 
இதில், குளத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, அறநிலையத்துறையினர் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
தொடர்ந்து, குளப்பகுதியில் யாரும் நுழையாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இதேபோல், இப்பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான திருமூல நாதசுவாமி கோயில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம் மற்றும் குளங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றைச் சீர் செய்து மழைநீரை சேமித்தால் சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால், குடிநீர் தட்டுப்பாட்டையும் ஓரளவிற்குத் தவிர்க்கலாம் என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →