காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஒருவர் கைது
திருத்தணியில், காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருத்தணியில், காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் நாகராஜ். இவர், திங்கள்கிழமை காலையில் பணியில் இருந்த போது, காவல் நிலையத்துக்கு வந்த ஒருவர் நுழைவு வாயிலில் படுத்துக் கொண்டாராம்.
இதைக் கண்ட நாகராஜ், காவல் நிலையத்துக்கு வருவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படுக்கக்கூடாது என்று கூறி அவரை எழுப்பியுள்ளார்.
அப்போது அந்த நபர் நாகராஜை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நாகராஜ் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், உதவி ஆய்வாளரை தாக்கியவர், சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த ஏசு(46) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, திருத்தணி போலீஸார் ஏசுவை கைது செய்தனர்.