திருவள்ளூர்

திருமுல்லைவாயலில் புதிய நூலகக் கட்டடம்: அமைச்சர் திறந்து வைத்தார்

DIN


ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் ரூ. 7 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய நூலகக் கட்டடத்தை தமிழ் வளர்ச்சி, தொல்பொருள் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சனிக்கிழமை திறந்துவைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சி, திருமுல்லைவாயல் விவேகானந்தர் நகர் பகுதியில் கிளை நூலகம் அமைக்க பொதுமக்கள் அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் பேரில், அப்பகுதியில் கிளை நூலகத்துக்கு புதிதாக கட்டடம் அமைக்க சட்டப்பேரவை உறுப்பினர் நிதி மூலம் ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, இப்பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் மற்றும் வாசகர்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் நூலக வளாகத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு செயல்படுத்தும் 23 வகையான திட்டங்களில், ஒவ்வொரு குடியிருப்பைச் சேர்ந்தவர்களும் பயன்பெற்று வருகின்றனர். 
இந்த நூலகம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் நூலகங்களின் எண்ணிக்கை 147-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மாணவ, மாணவியர், முதியோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தி, வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ச.சா.குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) மு.செந்தில்குமார், மாவட்ட நூலக அலுவலர் லெ.திலகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT