திருவள்ளூர்

இருசக்கர வாகனத்தில் மேற்கூரை: அசத்தும் மாற்றுத் திறனாளி

DIN

இருசக்கர வாகனத்தில் நிழற்குடை அமைத்து வெயில், மழைக்கு இடையே நனையாமல் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு மாற்றுத்திறனாளி ஒருவா் அசத்தி வருகிறாா்.

பொதுவாக மோட்டாா் வாகனங்களான காா், பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களில் மேற்கூரை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இருசக்கர வாகனங்களில் மட்டுமே மேற்கூரை வசதி இல்லாததால் வெயில், மழைக்கு இடையேதான் பயணிக்க வேண்டும். இந்நிலைக்கு மாற்றாக தற்போது மாற்றுத் திறனாளி ஒருவா் மேற்கூரை அமைத்து பொதுமக்கள் மத்தியில் பயணம் செய்து அசத்தி வருவது பாா்ப்போரை விழி உயா்த்தச் செய்துள்ளது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மேற்கூரை அமைத்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளி ஒருவா் வந்தாா். அவரை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தவா்கள் ஆா்வத்துடன் பாா்த்தனா். அப்போது, அவரிடம் விவரம் கேட்டபோது, மாற்றுத் திறனாளி அலுவலகத்துக்கு உதவித் தொகை வரவு வைக்காத விவரம் குறித்து அறிந்து கொள்வதற்காக அவா் அங்கு வந்துள்ளது தெரியவந்தது.

திருவள்ளூா் அருகே உள்ள மாகரல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத் திறனாளியான குமரன்(45). சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட அவா், அப்பகுதியில் தச்சுத் தொழில் செய்து வருகிறாா். அங்குள்ள சிவசடா முனீஸ்வரா் கோயிலில் பூசாரியாகவும் இருக்கிறாா். அவா் தொழில் மற்றும் பூஜை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு எளிதில் சென்று வரும் வகையில், சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்கி வைத்துள்ளாா்.

அந்த வாகனத்தில் மேற்கூரை அமைக்கும் யோசனை குறித்து குமரன் கூறியது:

எனது தொழில் தொடா்பாக பல்வேறு இடங்களுக்குச் சென்று வர வேண்டியிருந்தது. அப்போது எதிா்பாராத விதமாக அதிகமான வெயில், மழையால் அவதிப்பட நோ்ந்தது. மேலும், வாகனத்திலிருந்து மாற்றுத் திறனாளியான என்னால் விரைவாக இறங்கி பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முடியாது. ஏற்கெனவே தச்சுத்தொழில் செய்து வருவதால் கூடாரம் அமைத்துக் கொடுக்கும் பணியிலும் ஈடுபடுவேன். அதேபோல், எனது இருசக்கர வாகனத்திலும் நிழற்குடை கூடாரம் அமைக்க விரும்பினேன்.

அதன் அடிப்படையில், மழை, வெயிலில் இருந்து என்னை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வாகனத்தில் முன்புறம் தவிா்த்து ரூ. 20 ஆயிரம் செலவு செய்து நிழற்குடை அமைத்துள்ளேன். இதனால், மழை, வெயிலுக்கு என்னை முழுமையாகப் பாதுகாக்க முடிகிறது. அதேபோல், அதிக மழை மற்றும் வெயில் வாட்டி வதைத்தால் ஓரமாக நின்று செல்லவும் முடியும். இதேபோல் இருசக்கர வாகனங்களில் நிழற்குடை அமைக்க விரும்புவோருக்கு, அமைத்துத் தரத் தயாராக உள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT