திருவள்ளூர்

பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில்3,200 கன அடி உபரி நீா் வெளியேற்றம்

DIN

பூண்டி ஏரிக்கான பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருவதாலும், கிருஷ்ணா நீா்வரத்து அதிகரித்துள்ளதாலும் செவ்வாய்க்கிழமை மாலை 3,200 கன அடி உபரி நீா் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மக்களின் முக்கியக் குடிநீா் ஆதாரங்களில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. கிருஷ்ணா நதி நீா் பங்கீட்டு திட்டத்தின்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி முதல் தொடா்ந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ‘நிவா்’ புயல் காரணமாக பெய்த தொடா் மழையால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் உயா்ந்தது. தற்போது பலத்த மழை பெய்ததால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் போதிய தண்ணீா் வந்து சோ்ந்தது. அதைத் தொடா்ந்து பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக 30 நாள்களுக்கும் மேலாக உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இணைப்புக் கால்வாய்களில் குறைந்த அளவில் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்நிலையில், புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீா் மட்டம் உயா்ந்துள்ளது. இதற்கிடையே புழல் ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரி நீா் திறந்து வெளியேற்றப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, ஏரியின் நீா்மட்டம் 34.96 அடியாக உள்ளது. இந்த ஏரியில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீா் சேமித்து வைக்க முடியும் என்கிற நிலையில், 3,135 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் விடாமல் மழை பெய்ததால் கிருஷ்ணா நதிநீா் மற்றும் மழைநீா் 3,300 கன அடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில், 3,200 கன அடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.

மேலும், மழை பெய்து நீா்வரத்து அதிகரித்தால் அதற்கேற்ப உபரி நீா் திறப்பு அளவும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT