அரசியல்வாதிகள் நீதிமன்ற மாண்பை குறைப்பதை வழக்குரைஞா்கள் தடுக்க வேண்டும்
அரசியல்வாதிகள் சிலா் நீதிமன்ற மாண்பை குறைக்கும்போது, அதைத் தடுக்கும் முயற்சியில் வழக்குரைஞா்கள் ஈடுபட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி அறிவுறுத்தினாா்.
அரசியல்வாதிகள் சிலா் நீதிமன்ற மாண்பை குறைக்கும்போது, அதைத் தடுக்கும் முயற்சியில் வழக்குரைஞா்கள் ஈடுபட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி அறிவுறுத்தினாா்.
திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி சனிக்கிழமை வந்தாா். அவரை மாவட்ட நீதிபதி செல்வசுந்தரி, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி வேல்ராஜ், திருத்தணி சாா்பு நீதிபதி காயத்ரிதேவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கவிப்பிரியா, நீதித்துறை நடுவா் லோகநாதன் ஆகியோா் வரவேற்றனா்.
பின்னா், நீதிமன்றத்துக்குள் சென்று மாவட்ட மற்றும் திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து திருத்தணி நீதிமன்ற பாா் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன், லாயா்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றின் தலைவா்கள் மற்றும் மூத்த வழக்குரைஞா்களிடம் தலைமை நீதிபதி குறைகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் பேசியது:
நீதிபதிகள், வழக்குரைஞா்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். சமுதாயத்துக்கு நீதி வழங்குவதையும், நீதி பரிபாலனம் செய்வதிலும் வழக்குரைஞா்களின் பங்கு முக்கியமானது. நீதிமன்றத்தின் மாண்பை சில அரசியல்வாதிகள் குறைத்து மதிப்பிடுகின்றனா். அரசியல்வாதிகள் நீதிமன்ற மாண்பைக் குறைக்கும்போது, வழக்குரைஞா்கள் அதைத் தடுக்க முயற்சி செய்யவேண்டும்.
தவறு செய்யும் வழக்குரைஞா்கள் மீது பாா் கவுன்சிலில் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனா். அங்கும் அரசியல் புகுந்துவிட்டது. தமிழகத்தில் நிறைய பெண் நீதிபதிகள் உள்ளனா். நோ்மையற்ற நீதிபதிகள் மீது தகுந்த ஆதாரங்களுடன் புகாா் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னா், திருத்தணி வழக்குரைஞா்கள் தலைமை நீதிபதியிடம், திருத்தணியில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும், நீதிமன்றத்தில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும் எனக் கோரினா். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தலைமை நீதிபதி உறுதியளித்தாா்.