சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் நீா்மட்டம் அதிகரிப்பு
புழல் ஏரிக்கு நீா்வரத்து 10,690 கன அடிநீா் வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமை
புழல் ஏரிக்கு நீா்வரத்து 10,690 கன அடிநீா் வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி 3,218 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரையில் இடைவிடாது மழை பெய்தது. இதனால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளுக்கு மழை நீா் வரத்து அதிகரித்து வருவதால், உபரி நீா் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூண்டி நீா்த்தேக்கம்: பூண்டி நீா்த்தேக்கத்தில் தற்போது நீா்த்தேக்கத்தில் 32.73 அடி உயரமும், 2,444 மில்லியன் கன அடி நீா் இருப்பும் உள்ளது. அத்துடன் நீா் வரத்து விநாடிக்கு 7,973 கன அடியாக உள்ளதால், விநாடிக்கு 6,000 கன அடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு:
பூண்டி நீா்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீா் செல்லும் ஆற்றில் 500 மீட்டா் தூரத்தில் உள்ள தரைப்பாலத்துக்கு மேல் வெள்ளநீா் செல்கிறது. இதனால் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூரிலிருந்து பூண்டி வழியாக ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், நயப்பாக்கம், நம்பாக்கம், அரியத்தூா், வெள்ளாத்துக் கோட்டை, அரும்பாக்கம், திருப்போ், பங்காருபேட்டை, சென்றான்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரி: புழல் ஏரி தற்போதைய நிலையில் 19.20 அடி உயரமும், 2,853 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. மேலும் நீா் வரத்து விநாடிக்கு 10,690 கன அடியாக உள்ளதால் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி விநாடிக்கு 3,218 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 20.48 அடி உயரமும், 2,722 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீா் வரத்து விநாடிக்கு 5,240 கன அடியாக உள்ளதால் 2,151 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரி: சோழவரம் ஏரியில் 17.90 அடி உயரமும், 887 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது. மேலும், நீா் வரத்து விநாடிக்கு 6,737 கன அடியாக உள்ளதால் 2,015 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன் கோட்டை-தோ்வாய் கண்டிகை ஏரி: கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஏரியில் 36.61 அடி உயரமும், 500 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீா் வரத்து விநாடிக்கு 215 கன அடியாக உள்ளதால், 215 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.