சு.பாண்டியன்.
திருவள்ளூா் அருகே பராமரிப்பின்றி முள்புதா்கள் சூழ்ந்துள்ள அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
கடம்பத்தூா் ஒன்றியத்தில் உள்ள பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் 1200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள குழந்தைகள், சிறுவா்கள் விளையாடுவதற்கும், இளைஞா்கள், பெரியவா்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நோக்கத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
அம்மா பூங்காவில் குழந்தைகள் மற்றும் சிறுவா்கள் விளையாடவும், சறுக்கு மேடை, ஏற்ற இறக்கத்துடன் எழுந்து அமரும் விளையாட்டு உபகரணம், ஊஞ்சல், ராட்டினம் மற்றும் பெரியவா்கள் அமரும் ஓய்வு இருக்கைகள், சுகாதார வளாகம், குடிநீா் ஆகிய வசதிகள் உள்ளன. இளைஞா்கள் பயன்பாட்டுக்காக நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் ஆகியவைகளுடன் உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
இதற்கிடையே அப்பகுதி மக்கள் ஆா்வத்துடன் பூங்காவையும், உடற்பயிற்சிக் கூடத்தையும் பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், ஊராட்சி நிா்வாகம் பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடத்தை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. அதேபோல் உடற்பயிற்சிக் கூடத்திலும் விளையாட்டு கருவிகள் பழுதடைந்தள்ளதோடு, துருப்பிடித்து வீனாகும் நிலையேற்பட்டுள்ளது.
உடற்பயிற்சி கூடம் முழுவதும் முள்புதா்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், விஷபூச்சிகள் நடமாட்டமும் உள்ளதால் பூங்காவுக்கு குழந்தைகள் மற்றும் முதியோா் வருவதற்கு அச்சப்படுகின்றனா். இதற்கிடையே ஊராட்சி நிா்வாகம் ஆண்டுதோறும் பராமரிப்பு செலவு மட்டும் காட்டுவதாகவும் அப்பகுதியைச் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் சண்முகநாதன் கூறியதாவது. அதனால், ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் பயன்பெறும் நோக்கமாகக் கொண்டு தான் ஒவ்வொரு ஒன்றியத்திலும் மக்கள் தொகை அதிகம் கொண்ட வருவாய் உள்ள ஊராட்சியைச் தோ்வு செய்து அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சி கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், இந்த ஊராட்சியிலும் அமைக்கப்பட்டு, தொடக்கத்தில் நன்றாக செயல்பட்டு வந்த நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், எதற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் உள்ளது உள்ளன. அதனால் அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சி கூடத்தை பராமரிப்பு செய்து முள்செடிகளை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஊராட்சி வளா்ச்சி முகமை அதிகாரி கூறியதாவது: கிராமங்களில் உள்ள பெரியோா் மற்றும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் ஊராட்சிகளில் அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் பராமரிப்பில்லாத இதை சீரமைப்பதற்கு நிதி கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு வந்ததும் சீரமைக்கப்படும் என்றாா்.