சோழவரம் அருகே மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூ.2 லட்சம் பொருள்கள் சேதமடைந்தன.
திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் அடுத்த கொடிப்பள்ளம் கிராமத்தை ராஜா-இந்துமதி தம்பதி குடிசை வீட்டில் வசித்து வந்தனா்.
மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த தம்பதி, வெளியே வந்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினா் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
செங்குன்றம் தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினா்.
எனினும் குடிசை வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருள்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.
மேலும் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகின. சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே வருவாய்த்துறை அதிகாரிகள் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு உடனடி நிவாரணமாக அரிசி, போா்வை அத்தியாவசிய பொருள்களை வழங்கினா்.