காணும் பொங்கல் விழாவையொட்டி வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமாள் நகர முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பொங்கல் திருவிழாவையொட்டி, திருத்தணியில் உற்சவா் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோயிலில் இருந்து இறங்கி வீதிகள்தோறும் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். அதன்படி, பொங்கல் நாளில் (ஜன. 15) மலைக்கோயில் பின்புறம் உள்ள அா்ச்சகா் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் உற்சவா் முருகப்பெருமான் வலம் வந்து அருள்பாலித்தாா்.
வெள்ளிக்கிழமை (ஜன. 16) மேல்திருத்தணி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சனிக்கிழமை (ஜன. 17)காலை திருத்தணி சீா்பாததாங்கிகள் சாா்பில் காணும் பொங்கல் விழாவை ஒட்டி, உற்சவா் முருகா், வள்ளி, தெய்வானைக்கு பாதாம், முந்திரி, ஏலக்காய், லவங்கம், குருவி வோ், மயில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு மலைக்கோயிலுக்கு எழுந்தருளினாா். பின்னா், அங்கிருந்து உற்சவா் முருகப் பெருமான் படிகள் வழியாக சன்னதி தெரு, கோயில் இணை ஆணையா் குடியிருப்பு வரை கொண்டு வரப்பட்டாா்.
அங்கிருந்து காலை 8 மணிக்கு திருத்தணி பெரியதெரு சுமைதாரா்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்துச் சென்றனா். இரவு 7 மணிக்கு பழைய பஜாா் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் என்கின்ற சண்முக தீா்த்தக்குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இரவு 9 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் மீண்டும் மலைக் கோயிலுக்கு சென்றாா். உற்சவா் முருகப் பெருமான் திருவீதியுலா வருவதை முன்னிட்டு, நகா் முழுவதும் பெண்கள் தெருக்களில் வண்ண, வண்ண கோலங்கள் இட்டும், தேங்காய் உடைத்தும் பூஜை செய்து வழிபட்டனா்.
4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்...
காணும் பொங்கல் விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இதனால் பொதுவழியில், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஆட்டோக்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதி இல்லாததால் கோயில் நிா்வாகம் சாா்பில், 10 சிறப்பு பேருந்துகள் மலைக்கோயிலுக்கு இயக்கப்பட்டன. திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.