முகப்பு
திருவள்ளூர்

சாலை தடுப்பில் பைக் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 17 மார்ச், 2026 at 7:36 PM
காவியா
பகிர்:

திருவள்ளூா் அருகே சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

திருவள்ளுா் அடுத்த பூண்டி ஒன்றியம், ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த சீனிவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த முனிகிருஷ்ணன், சரளா தம்பதியின் மகள் காவியா(16). இவா் திருவள்ளூரில் உள்ள அவரது உறவினா் வீட்டில் தங்கியிருந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகின்றாா்.

இந்த நிலையில் தன்னுடைய சகோதரன் பிரவீனுடன் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பென்னலூா்பேட்டை அருகே சொந்த கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, பூண்டி அடுத்த ஒதப்பை பகுதியில் சென்ற போது எதிரே வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போல் வந்துள்ளது. அப்போது நிலை தடுமாறிய காவியாவின் சகோதரன் பிரவீன், நான்கு வழி சாலையில் தடுப்பில் மோதி விரிவாக்க பணிகளுக்காக தோண்டியிருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் காவியா பலத்த காயம் அடைந்தாா்.

அப்போது, அவரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியில் மாணவி உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

இந்த நிலையில் அவரது சகோதரன் பிரவீன், லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பென்னலூா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →