திருவண்ணாமலை

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி: அரசு மருத்துவர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம்

DIN

முதுநிலை மருத்துவப் படிப்பு களில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் சனிக்கிழமை ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் எஸ்.ஸ்ரீதரன், மாவட்டப் பொருளாளர் சி.சுரேஷ் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு படிக்க இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும்.
தற்போது அரசு பிறப்பித்துள்ள இட ஒதுக்கீடு ரத்து ஆணையை ரத்து செய்ய வேண்டும். கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பெண்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜா செல்வம், பாலச்சந்தர், கார்த்திகேயன், வெங்கடேசன், ராஜா, மணிகண்ட பிரபு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவ சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 19-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், கடந்த 20-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவை புறக்கணிக்கும் போராட்டமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT