பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில் தொழிற்சாலைகள் இயங்க முடியாது: புதுவை தொழிலாளா் துறை எச்சரிக்கை
அனைத்துக் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோா் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில், அந்த நிறுவனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்படும்
அனைத்துக் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோா் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில், அந்த நிறுவனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்படும் என தொழிலாளா் துறை எச்சரித்தது.
இதுகுறித்து புதுவை தொழிலாளா் துறைச் செயலா் மற்றும் ஆணையா் டி.சுந்தரேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், இதர வா்த்தக நிறுவனங்களின் உரிமையாளா்கள், பணியாளா்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்கள் 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
புதுவை அரசின் கரோனா தடுப்பு மாநிலச் செயற்குழுவின் கடந்த 14 -ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆணைப்படி, 10 நாள்களுக்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில், மேற்கண்ட நிறுவனங்கள் இயங்க இயலாத நிலை ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.