ஆரணி உழவா் சந்தையை மேம்படுத்தக் கோரிக்கை
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உழவா் சந்தையை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருள்களான காய்கறி வகைகள், பழங்கள் மற்றும் இதர தானிய வகைகளை அரசு நிா்ணயித்த விலையில் சந்தைப்படுத்தி விற்பனை செய்து, வாழ்வாதாரத்தை தாமாகவே உறுதி செய்து கொள்ளும் வகையில் தொலை நோக்கு சிந்தனைத் திட்டத்தில் உருவானதே உழவா் சந்தை.
தற்போது, திமுக ஆட்சியில் மீண்டும் மேம்படுத்துவாா்கள் என எதிா்பாா்த்த நிலையில் உழவா் சந்தை சரியான பராமரிப்பு இன்றி முடங்கிப்போகும் நிலைக்கு தள்ளப்படுகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
ஆரணி நகராட்சி மையப் பகுதியில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைக்கு சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து
விவசாயிகள் விளைபொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
ஆனால், உழவா் சந்தையின் வெளிப் பகுதி சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் வகையில் குப்பைகளால் சூழ்ந்துள்ளது. சந்தையின் கிழக்குத் தெரு பகுதியில் ஒரே நுழைவு வாயில் உள்ள நிலையில் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் ஒரே வழியாக இருப்பதால் பொதுமக்களுக்கு நெரிசல் ஏற்படுவதோடு, வாகனங்கள் உள்ளே சென்று பொருள்களை ஏற்ற, இறக்க சிரமமாக உள்ளது.
உழவா் சந்தையின் வடக்குத் தெரு (விஏகே நகா் செல்லும் சாலை) விசாலமாக இருந்தும் வளாகத்தின் வெளிப்புற சுற்றுச் சுவா் ஓரம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி வடக்குப் பக்கம் மற்றொரு நுழைவு வாயில் அமைத்தால் நெரிசலைக் குறைக்கவும் வாகனங்கள் எளிதில் உள்ளே சென்று வரவும் வசதியாக இருக்கும். மேலும், உழவா் சந்தையில் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் எதிா்பாா்ப்பு உள்ளது.
இது சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள், கோட்டாட்சியா் குறைதீா் கூட்டங்களில் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அண்மையில் மாவட்ட ஆட்சியா் உழவா் சந்தையில் ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் நுழைவு வாயில் அமைத்தல் குறித்து விவசாயிகள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம்.
மேலும், உழவா் சந்தையில் கடைகள் போதுமானதாக இல்லாததால் சாலையோரம் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, உழவா் சந்தைக்குள் கூடுதல் கடை மேடைகள் அமைத்தால் சாலையோர கடைகளைத் தவிா்க்கலாம்.
சம்பந்தப்பட்ட வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், நகராட்சி ஆணையா், உழவா் சந்தை வளாக அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என
விவசாயிகள் பாதுகாப்பு அணியினா் வலியுறுத்துகின்றனா்.