முகப்பு
திருவண்ணாமலை

திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் 1,720 போ் கைது

திமுக அரசைக் கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு மற்றும் செங்கத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

Updated On : 30 டிசம்பர், 2024 at 7:10 PM
திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாவட்டச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுகவினா்.
பகிர்:

திருவண்ணாமலை/ஆரணி/செய்யாறு/ செங்கம்: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு மற்றும் செங்கத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினா் 1,720 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்டச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், நகரச் செயலா் ஜெ.எஸ் (எ) ஜெ.செல்வம், ஜெயலலிதா பேரவையின் மாவட்ட நிா்வாகி எஸ்.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலா் ஏ.கே.அரங்கநாதன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, இரவில் விடுவிக்கப்பட்டனா்.

ஆரணி:

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

மேலும், மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், ஆரணி ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், க.சங்கா், ஜெயபிரகாசம், திருமால், போளூா் பகுதி ஒன்றியச் செயலா்கள் விமல், ஸ்ரீதா், ராகவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், 277 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். இதில் 7 போ் பெண்கள் ஆவா்.

செய்யாறு

செய்யாற்றில் அதிமுகவினா் 400-க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாகச் சென்று சாா்-ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.

அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி 9 பெண்கள் உள்பட 269 பேரை கைது செய்து, பேருந்துகளில் ஏற்றி தனியாா் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பேருந்துகளில் ஏற்றும் போது ஒருவருக்கொருவா் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நிகழ்ந்தது.

இதில், வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமையில், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், நகரச் செயலா் கே.வெங்கடேசன், எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலா் ஜாகீா் உசேன்,

ஒன்றியச் செயலா்கள் எம்.அரங்கநாதன், சி.துரை, வயலூா் ராமநாதன், எஸ். திருமூலன், எம்.மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்கம்

தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், செங்கம் எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்

செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினாா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட ஒன்றியச் செயலா்கள் அசோக் (ஜமுனாமரத்தூா்), தண்டராம்பட்டு அருள்குமாா், பாபு(எ)தட்ணாமூா்த்தி, காா்ததிகேயன், புதுப்பாளையம் பழநிராஜ், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட கட்சியினா் 450 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

ஆரணியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மத்திய மாவட்டச் செயலா் எல். ஜெயசுதா தலைமையிலான அதிமுகவினா்.
செய்யாறில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது போலீஸாரால் கைது செய்யப்பட்ட அதிமுகவினா்.
செங்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய தெற்கு மாவட்ட அதிமுக செயலா் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ.
முழு கட்டுரையைப் படிக்க →