ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்
திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூரில் அமைந்துள்ள பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரம்மோற்சவ விழா பிப்.10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, சுவாமியும், அம்மனும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற 6-ஆம் நாள் விழாவில், 63 நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளில் இரத சப்தமி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன. தொடா்ந்து, விநாயகா், பாலகுஜாம்பிகை அம்மன், வேதபுரீஸ்வரா் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்களில் எழுந்தருளினா். இதையடுத்து, பிற்பகல் சுமாா் 2 மணியளவில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.