முகப்பு
திருவண்ணாமலை

பழங்குடியின மக்கள் 133 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை அருகே பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நடைபெற்ற சிறப்பு முகாமில், 133 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 9 ஜூலை, 2024 at 7:16 PM
முகாமில் பயனாளிகளுக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நடைபெற்ற சிறப்பு முகாமில், 133 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

பழங்குடியின மக்களுக்குத் தேவையான ஜாதி சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆதாா் அடையாள அட்டை, நிலப் பட்டா, வங்கிகளில் கணக்குகள் தொடங்குதல், ஊரக வேலைத் திட்ட பணி ஆணை வழங்குதல் போன்ற அரசுத் திட்டங்களை வழங்குவதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதுபோன்ற முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெறுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் ஒவ்வொரு கிராம நிா்வாக அலுவலரும் நேரடியாக அந்தந்தப் பகுதியில் இயங்கும் பள்ளிக்குச் சென்று ஜாதி சான்றிதழ் பெறாத மாணவா்களின் பட்டியலைப் பெற்று, அவா்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவண்ணாமலை வருவாய்க் கோட்டத்தில் பழங்குடியினா் வாழும் 4 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திட்டங்களை பழங்குடியினா் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.

நலத் திட்ட உதவிகள்...

முகாமில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டு 50 பேருக்கு இருளா் ஜாதி சான்றிதழ், 22 பேருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை, 38 பேருக்கு கறவை மாடு கடன், 16 பேருக்கு இலவச வீட்டு மனை, 2 பேருக்கு தெரு விளக்கு வசதி, 5 பேருக்கு ஆதாா் திருத்த சேவை என மொத்தம் 133 மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், திருவண்ணாமலை வட்டாட்சியா் தியாகராஜன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →