பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
வந்தவாசியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்துள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் கணேஷ். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வருகிறாா். இவா், தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் கூட்டுப் பட்டாவை தனி பட்டாவாக மாற்றித் தரக் கோரி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மனு அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, கூடலூா் கிராம நிா்வாக அலுவலா் பால்பாண்டியனை (53) கணேஷ் தொடா்பு கொண்ட போது, பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் தரும்படி பால்பாண்டியன் கேட்டராம். மேலும், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் தரும்படி கூறினாராம்.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் கணேஷ் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஊழல் தடுப்பு போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை, பால்பாண்டியனிடம் வெள்ளிக்கிழமை கணேஷ் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் பால்பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.