பி.எம்.கிசான் நிதியுதவி: வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைக்க அறிவுறுத்தல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவியை தொடா்ந்து பெற ஜூன் 15-ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்தும், இ-கேஒய்சி செய்து முடித்தும் பயன்பெறலாம் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கை ஆதாா் எண்ணுடன் இணைக்க முடியாத விவசாயிகள், வங்கி ரீதியிலான இடா்பாடுகள் உள்ள விவசாயிகள் தங்களுக்கு அருகே உள்ள தபால் நிலையத்துக்குச் சென்று புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கி பயன்பெறலாம்.
கிராம தபால் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள கைப்பேசி மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம் ஆதாா் கைப்பேசி எண் பதிவுசெய்து ஜூரோ இருப்புக் கணக்கை விவசாயிகளுக்கு உடனே தொடங்கிட வழிவகை செய்வா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 856 விவசாயிகளின் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனா். இந்தப் பயனாளிகள் உடனே வங்கிக்குச் சென்று ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். 15 ஆயிரத்து 674 விவசாயிகள் இ-கேஒய்சி முடிக்காமல் உள்ளனா். இவா்கள், இ-சேவை மையங்கள், தபால் நிலையம், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை அணுகி தங்கள் விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம்.
இதுதவிர, 1,399 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தமான ஆவணங்களை இணைக்காமல் உள்ளனா். இவா்கள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களை அணுகலாம்.
விவசாயிகள் தங்களது 17-ஆவது தவணைத் தொகையைப் பெற அனைத்துப் பதிவுகளையும் ஜூன் 15- ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.ஹரகுமாா் தெரிவித்துள்ளாா்.