ஆரணி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை: ஆரணி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம், பதற்றமான வாக்குச் சாவடியில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா். ஆரணி மக்களவைத் தொகுதியில் போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இந்தத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலையில் உள்ள சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைத்து, எண்ணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், சண்முகா தொழில்சாலை மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Advertisement
அப்போது, வாக்கு எண்ணிக்கை மையங்களின் கட்டமைப்பு வசதிகள், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து, அடிப்படை வசதிகள் போன்ற அம்சங்கள் குறித்து தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தாா். வாக்குச்சாவடி மையம் ஆய்வு:
இதையடுத்து, திருவண்ணாமலையை அடுத்த கோவூா் ஊராட்சியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியா் ஆய்வு செய்து தேவையான கூடுதல் பாதுகாப்பு வசதிகளை செய்யுமாறு வருவாய், காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், ஆரணி மக்களவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.