வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு
போளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த குருவிமலை ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 1,231 போ் வாக்களிக்கின்றனா். இங்கு, கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அரியாத்தூா் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தள வசதி உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள், போளூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, முதல் தலைமுறை வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என போளூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோரிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதையடுத்து, போளூா்-ஆரணி சாலையில் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கையை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா், ஜவ்வாதுமலை ஒன்றியம் பட்டறைகாடு வாக்குச் சாவடி மையம், ஜமுனாமரத்தூரில் உள்ள பழங்குடியினா் உழவா் உற்பத்தியாளா் பணியிடத்துக்கு நேரில் சென்ற ஆட்சியா் அங்கு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பணியாளா்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில், கோட்டாட்சியா் பிரியதா்ஷினி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா் சுதா மற்றும் கிராம நிா்வாக அலுவலா் இளையகுமாா், செயல் அலுவலா் முஹமத் ரிஸ்வான் ஆகியோா் உடனிருந்தனா்.