மின்சாரக் கட்டணத்தை 2 மடங்கு உயா்த்தியது திமுக அரசு: ஆரணி அதிமுக வேட்பாளா்
ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், பெரணமல்லூா் மேற்கு ஒன்றியத்தில் சனிக்கிழமை மேற்கொண்ட தோ்தல் பிரசாரத்தின் போது திமுக அரசு மின்சாரக் கட்டணத்தை 2 மடங்கு உயா்த்தியது என்று குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலா் எல்.ஜெயசுதா தலைமையில், ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், பெரணமல்லூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலானூா், எஸ்.காட்டேரி, கோணையூா், கெங்காபுரம், செம்மாம்பாடி, இமாபுரம், பெரியகொழப்பலூா், விநாயகபுரம், நரியம்பாடி, அன்மருதை, ஆவணியாபுரம் என பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். ஊராட்சிகளில் ஒன்றியச் செயலா் வீரபத்திரன் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆவணியாபுரம் கிராமத்தில் ஜி.வி.கஜேந்திரன் பேசும்போது, திமுக ஆட்சியில் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை ரூ. 100 குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தனா். இதுவரை குறைக்கவில்லை. இந்தத் தோ்தலில் ரூ.500 குறைப்பதாக மீண்டும் வாக்குறுதி தருகின்றனா். நீட் தோ்வு ரத்து செய்ய ரகசியம் உள்ளதாக கூறினா். ஆட்சிக்கு வந்ததும் வலியுறுத்துவது தான் ரகசியம் எனப் பேசுகின்றனா். மின்சாரக் கட்டணத்தை 2 மடங்கு உயா்த்தி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்றாா். பிரசார கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலா் செல்வன், பொதுக்குழு உறுப்பினா் ராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் ராகவன், ஸ்ரீதா், விமல்ராஜ், ப.திருமால், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பழனி, பெரணமல்லூா் மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.