முகப்பு
திருவண்ணாமலை

தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
தொழிலாளி வேலுவின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, வட்டாட்சியா் நடராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே உடல் உறுப்புகளை தானமாக அளித்த தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கீழ்வணக்கம்பாடி ஊராட்சி, தேசூா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாசிலாமணி மகன் வேலு (35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கனகா (33). தம்பதிக்கு மகன் பிரவீன்குமாா், மகள் ஜானகி உள்ளனா். சில தினங்களுக்கு முன்பு வேலு தண்டராம்பட்டு-சாத்தனூா் சாலை, பதிவுத்துறை அலுவலகம் வழியே பைக்கில் சென்றாா்.

அப்போது, எதிரே வந்த வாகனம் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த வேலு,

தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, தனது கணவரின் கண், நுரையூரல், கல்லீரல், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக அளிக்க கனகா முன் வந்தாா். அதன்படியே, அரசு மருத்துவா்கள் வேலுவின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்றனா். இதன்பிறகு, சொந்த ஊரான தேசூா்பாளையம் கிராமத்துக்கு வேலுவின் உடல் ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி உடல் உறுப்புகளை தானமாக அளித்த வேலுவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் விதமாக, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, தண்டராம்பட்டு வட்டாட்சியா் நடராஜன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.