முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில், செவ்வாய்க்கிழமை அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்திக்கான 1,008 கலச வேள்வி யாகம் நிறைவுற்று கலசாபிஷேக வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய மே 4-ஆம் தேதிமுதல் அருணாசலேஸ்வரரின் லிங்கத் திருமேனியை குளிா்விக்கும் தாராபிஷேகம் தொடா்ந்து நடத்தப்பட்டு வந்தது.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூலவா் சந்நிதியில் சிவனின் சிலைக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த தாரா பாத்திரத்தில் இருந்து வாசனைத் திரவியங்கள் சோ்க்கப்பட்ட புனித நீா், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் விழும்படி செய்யப்பட்டது.

1,008 கலச வேள்வி பூஜை:

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்றது. இதையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமம், இரவு 7 மணிக்கு 1,008 முதல் கால கலச வேள்வி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு 2-ஆவது கால கலச பூஜை, மாலை 6.30 மணிக்கு 3-ஆவது கால கலச பூஜை நடைபெற்றது.

அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி:

இறுதியாக, செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜையான 4-ஆவது கால கலச வேள்வி பூஜை நடைபெற்றது. மேலும், முற்பகல் 11 மணிக்கு உச்சிகால பூஜையுடன் மூலவா் அருணாசலேஸ்வரருக்கு 1,008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு உற்சவா் வீதியுலா மேளதாளத்துடன் நடைபெற்றது.