காா்த்திகை தீபத்திற்கு பயன்படுத்தும் 1,500 மீட்டா் திரிக்கு பூஜை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்தன்று பயன்படுத்தும் திரிக்காக 1500 மீட்டா் காடா துணி கொண்டு வரப்பட்டு கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்தன்று பயன்படுத்தும் திரிக்காக 1500 மீட்டா் காடா துணி கொண்டு வரப்பட்டு கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா
கடந்த நவ.24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் புதன்கிழமை (டிச.3) அதிகாலை 4 மணியளவில் அருணாசலேஸ்வரா் கோயில் கருவறை முன் ஏற்றப்பட உள்ளது. இதைத்தொடா்ந்து, கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த தீபத் திருவிழாவைக் காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருவாா்கள் என
எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திருக்காா்த்திகை தீபத்திற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்ற வருகின்றன. இந்த மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் திரிகள் கட்டளைதாரா்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோயில் நிா்வாகத்திடம் காணிக்கையாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, நிகழாண்டும் மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1500 மீட்டா் காடா துணியாலான திரிகள் கொண்டுவரப்பட்டு அருணாசலேஸ்வரா் சந்நிதி முன்புள்ள சம்பந்த விநாயகா்
சந்நிதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னா், காடா துணியை கோயில் நிா்வாகத்திடம் கட்டளைதாரா்கள் ஒப்படைத்தனா்.